Aug 16, 2026
Thisaigal NewsYouTube
14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்
தற்போதைய செய்திகள்

14.6 மில்லியன் லெபனான் நகை வழக்கு/ மேல்முறையீட்டு தீர்ப்பு வரை இழப்பீட்டை நிறுத்தக் கோரி ரோஸ்மா மனுத்தாக்கல்

Share:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூர், லெபனான் நகை விற்பனை நிறுவனமான குளோபல் ராயல்டி டிரேடிங் சால்-க்கு 14.6 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது மலேசிய மதிப்பில் சுமார் 67.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை, மேல்முறையீடு முடியும் வரை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரோஸ்மாவின் வழக்கறிஞர் ரேசா ரஹீம், இந்தத் தொகை மிகவும் பெரியது என்றும், மேல்முறையீட்டில் வெற்றி பெற்றாலும், லபனானின் பெய்ரூட் நகரில் செயல்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து அந்தப் பணத்தை மீண்டும் பெற முடியுமா? என்பது சந்தேகமாக இருப்பதாக வாதிட்டார்.

மேலும், கடந்த 2024-ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரோஸ்மாவின் வங்கிக் கணக்கும், பிற சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவரது கணக்கில் சுமார் 1 லட்சம் ரிங்கிட் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிறுவனத்தின் வழக்கறிஞர் வினோதனி ராஜ கோபல், நிறுவனம் நிதி ரீதியாக பலவீனமாக உள்ளது அல்லது இழப்பீட்டு தொகையை மறைக்கும் நோக்கம் கொண்டுள்ளது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் ரோஸ்மா தரப்பில் சமர்ப்பிக்கவில்லை என்றும், வெறும் ஊகங்கள் மட்டுமே தடை உத்தரவுக்கு காரணமாக இருக்க முடியாது என்றும் வாதிட்டார்.

இந்த மனு தொடர்பான தீர்ப்பை நீதித்துறை ஆணையர் மேரியானி கனி ஆகஸ்ட் 12ஆம் தேதி வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டு "பரிசீலனைக்காக" வழங்கப்பட்ட 43 நகைகளை திருப்பி ஒப்படைக்கவோ அல்லது அவற்றின் மதிப்பான 14.6 மில்லியன் அமெரிக்க டாலரை செலுத்தவோ கடந்த ஜூன் 10-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், ரோஸ்மாவுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News