தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பராமரிப்பு இல்லம் ஒன்றில், அடித்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் 54 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் போலீசார் ஐவரை கைது செய்துள்ளனர்.
அந்த பராமரிப்பு மையத்தின் காப்பாளர் மற்றும் அந்த மையத்தில் தங்கியிருந்தவர்கள் நால்வர் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டாத்தோ முகமத் அல்வி ஜைனல் அபிதீன் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில், தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார கிளினிக்கிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவ்விடத்தில் நபர் ஒருவர் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தை குற்றவியல் சட்டம் 302 ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களை தடுப்புக்காவலில் வைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளர் என்று டாத்தோ முகமத் அல்வி ஜைனல் அபிதீன் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து பொதுமக்கள் எந்தவொரு தேவையற்ற ஊகங்களையும் வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.










