பேங்க் ரக்யாட் இணையதளம் முடக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்த போதிலும், நாட்டின் இணையவழி வங்கிச் சேவைகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
இதுவரை கண்டறியப்பட்ட சைபர் தாக்குதல் முயற்சிகளால் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்படவில்லை என்றும், நாட்டின் இணையவழி வங்கிச் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தார் தலைநகர் டொஹாவில் நடைபெறும் அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பேங்க் ரக்யாட் இணையத்தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், இணையத்தளத்தின் தோற்றத்தை மாற்றியமைக்கும் வகையிலான 'வெப் டிஃபேஸ்மண்ட்’ தாக்குதல் மட்டுமே என்றும், வங்கியின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஐ-ரக்யாட் இணையவழி வங்கிச் சேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
அதேவேளையில், பாதிக்கப்பட்ட சர்வருக்கான அணுகலை வங்கி முடக்கியதுடன், வாடிக்கையாளர்களை ஐ-ரக்யாட் இணையதளத்திற்கு திருப்பிவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








