தைப்பிங்கில் வாழும் இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, நலன் மற்றும் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, 1.85 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் துணை கல்வியமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

தைப்பிங் நகரில் நேற்று இரவு நடைபெற்ற தீபாவளி கலை, கலாசார நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்காக இந்தச் சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தைப்பிங் ஜாலான் பசார் பகுதியில் புதிய ‘லிட்டல் இந்தியா’ நுழைவாயில் அலங்கார வளைவு அமைப்பதற்கு 2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார்.

அதேவேளையில், சாலை மேம்பாட்டுக்கு 5 லட்சம் ரிங்கிட் என மொத்தம் 7 லட்சம் கூடுதல் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த நிதியின் மூலம் தைப்பிங் லிட்டல் இந்தியா பகுதியை அழகுபடுத்தி, இந்திய வணிகர்களின் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதுடன் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நகராண்மை மன்ற உறுப்பினர் சுப்ரமணியம் ராமநாதன் ரிஷி ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சுமார் 2,500 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் அலங்கார விளக்குகள் மற்றும் ஏற்பாடுகளுக்காக 40 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கான நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சுப்ரமணியம் ராமநாதன் ரிஷி தெரிவித்தார்.








