பினாங்கு மாநிலத்தின் இன, மத, மொழி மற்றும் கலாசார பன்முகத்தன்மையே மாநிலத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவதாக அம்மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில், சமூக வேறுபாடுகளைப் பிரிவினைக்கான காரணமாகப் பார்க்காமல், கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தமிழ்ப்பள்ளிகளின் கல்வி வளர்ச்சிக்காக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2.42 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில், டிஜிட்டல் வசதிகள் மற்றும் ஸ்டெம் கல்வி மேம்பாட்டிற்காக 1.34 மில்லியன் ரிங்கிட்டும், 28 தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக 7 லட்சத்து 68 ஆயிரத்து 901 ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பினாங்கில் உள்ள 28 தமிழ்ப்பள்ளிகளுக்கும் நிரந்தர நில உரிமை பெற்றுத்தர மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐந்து பள்ளிகளுக்கு நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சாவ் கோன் இயாவ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய இளைஞர்கள் மற்றும் சிறு தொழில் முனைவோரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக தெக்குன் நேஷனல், எஐஎம், மித்ரா உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.








