செர்டாங், ஜனவரி.10-
சிலாங்கூர், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனை, ஒரே நாளில் 17 மணி நேர இடைவெளியில் 76 இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து புதிய மருத்துவச் சாதனை படைத்துள்ளது.
இந்தத் தீவிர மருத்துவ முகாம், காலை 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. இதில் 76 நோயாளிகளுக்குப் பல்வேறு இருதயச் சிகிச்சைகள் வெற்றிகரமாக அளிக்கப்பட்டன.
சிகிச்சை பெற்றவர்களில் 48 பேருக்கு இருதய இரத்த நாள அடைப்பை நீக்கும் 'ஸ்டென்ட்' (Stent) பொருத்தப்பட்டது. மற்றவர்களுக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இருதய நோய் நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் இடைவிடாது சுழற்சி முறையில் பணியாற்றி இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
இருதயச் சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர்களுக்கு விரைவான மறுவாழ்வு அளிக்கவும் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மலேசிய பொது சுகாதாரத் துறையில், ஓர் அரசு மருத்துவமனை இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு இருதயச் சிகிச்சை அளித்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.








