ஷா ஆலாம், நவம்பர்.18-
சிலாங்கூர் ஶ்ரீ மூடா மற்றும் புக்கிட் லங்சோங் முதலிய பகுதிகளில் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தாம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கோத்தா கெமுனிங்கில் நிலவி வரும் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காண்பற்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் 2026 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரகாஷ், தாமான் கிரின்வில், புக்கிட் கெமுனிங் மற்றும் பூங்கா இண்டா போன்ற பகுதிகளில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு மக்களைச் சிரமத்தில் ஆழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இப்பிரச்னையைக் களைவதற்கு வெள்ளத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.
அதே வேளையில் பத்து 7 மற்றும் புக்கிட் கெமுனிங் முதலிய பகுதிகளில் கால்வாய் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அரசை வலியுறுத்தினார்.
மேலும் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்படுகின்றவர்களுக்கு நிவாரண நிதியாக மூவாயிரம் ரிங்கிட் முதல் ஐந்து ஆயிரம் ரிங்கிட் வரை உயர்த்தப்பட வேண்டும் என்பதுடன் வெள்ள இடரை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளுக்கு காப்புறுதித் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பிரகாஷ் வலியுறுத்தினார்.








