கோலாலம்பூர், நவம்பர்.01-
பூடி95 மானியத் திட்டத்தில் மாதாந்திர 300 லிட்டர் ரோன்95 பெட்ரோல் ஒதுக்கீடு, கிட்டத்தட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் போதுமானதாக இருக்கிறது என்பதை அரசாங்கத்தின் தொடக்க நிலைப் புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த அக்டோபர் மாதத்தில், மானியம் பெறும் பயனாளிகளில் 0.6 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 300 லிட்டர் பெட்ரோலையும் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று 2வது நிதி அமைச்சர் அமீர் ஹம்ஸா அஸிஸான் அறிவித்துள்ளார்.
பெரும்பாலான மலேசியர்களின் சராசரி மாதப் பயன்பாடு சுமார் 80 லிட்டர்கள் மட்டுமே என்பதால், 300 லிட்டர் ஒதுக்கீட்டைக் குறைக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்று அவர் வதந்திகளை மறுத்துள்ளார். இந்தத் தரவுகள், அரசு நிர்ணயித்த ஒதுக்கீடு பெரும்பாலான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், மானியத் தொகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று அரசாங்கம் நம்புகிறதாக அவர் மேலும் தெரிவித்தார்.








