குவாந்தான், ஜனவரி.02-
பகாங் மாநிலத்தின் குவாந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டக் கடற்கரைகளில் பலத்த காற்றும் கடல் சீற்றமும் நிலவுவதால், பொதுமக்கள் எவரும் கடலில் குளிக்கவோ அல்லது நீர் விளையாட்டுகளில் ஈடுபடவோ வேண்டாம் என மலேசிய பொதுப் பாதுகாப்புப் படை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஜனவரி 6-ஆம் தேதி வரை 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், 4 மீட்டர் உயரம் வரை பெரும் அலைகளும் எழக்கூடும் என வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா கணித்துள்ளதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தடுத்துக் காக்க அறிவுறுத்தியுள்ளார் பொதுப் பாதுகாப்புப் படையின் பகாங் மாநில இயக்குநர் கலோனல் சே அடாம் ஏ ரஹ்மான்.
செராதிங், தெலுக் செம்பெடாக் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலா கடற்கரைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வேளையில், ரவூப், பெந்தோங், பெரா ஆகிய உள்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரவூப் பகுதியில் பெய்த கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்ததால், தற்போது வரை 15 குடும்பங்களைச் சேர்ந்த 74 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.








