ஈப்போ, செப்டம்பர்.04-
கடந்த வாரம் ஈப்போ, ஜாலான் ஹார்லியில் நிகழ்ந்த கோரக் கொலைத் தொடர்பில் ஒரு லோரி ஓட்டுநர், ஈப்போ, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
M.I. சரவணன் என்ற 32 வயதுடைய அந்த லோரி ஓட்டுநர் மாஜிஸ்திரேட் முகமட் ஹாரித் முகமட் மஸ்லான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதன்கிழமை, ஈப்போ, ஜாலான் ஹார்லியில் உள்ள ஒரு ஹோட்டல் கட்டடத்தின் குறுக்குச் சந்தில், ஃபெண்டி என்று மட்டுமே அடையாளம் கூறப்பட்ட ஆடவர் ஒருவரைக் கொலை செய்ததாக சரவணன் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் சரவணன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
சம்பவத்தன்று ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, அந்த காரிருள் நேரத்தில் நபர் ஒருவரைப் பின் தொடர்ந்து விரட்டிக் கொண்டு வந்த லோரி ஒன்று, அந்த நபரை மோதித் தள்ளியதுடன், அந்த நபர் மீது சக்கரங்களை ஏற்றிக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும் போலீசார் வெளியிட்ட தகவலின்படி, அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் லோரியின் பதிவு எண், அந்த லோரியைச் செலுத்திய நபரின் முகம் பதிவாகியிருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தனர்.








