ஜோகூர் பாரு, ஜனவரி.18-
ஜோகூர் பாருவில் காரில் அமர்ந்திருந்த காதலர்களை Taser எனப்படும் மின்சார அதிர்ச்சி கருவியைக் காட்டி மிரட்டி,கைப்பேசிகளையும் பணத்தையும் பறித்துச் சென்ற கொள்ளையர்களை அந்த ஜோடி துணிச்சலுடன் விரட்டிச் சென்றது. கொள்ளையர்களிடம் அஞ்சாமல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் காரில் விரட்டிச் சென்ற 18 வயது இளைஞர், பண்டார் ஜெயா புத்ராவில் கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிள் மீது தனது காரை மோதி அவர்களைக் கீழே விழச் செய்தார்.
இந்த மோதலில் சுமார் 7,000 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைப் பறித்துச் சென்ற கொள்ளையர்கள் கீழே விழுந்த போதிலும், தப்பியோடி மறைந்து விட்டதாக ஜோகூர் பாரு செலாத்தான் காவற்படைத் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் தெரிவித்தார். ஆயுதம் ஏந்திய கூட்டுக் கொள்ளைப் பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ள காவற்படையினர் , தப்பியோடிய அந்த இரு நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.








