Sep 21, 2026
Thisaigal NewsYouTube
வினேஸ்வரன் மரண வழக்கில் போலீஸ் படைத் தலைவர் உடனே தலையிடக் குடும்பத்தினர் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

வினேஸ்வரன் மரண வழக்கில் போலீஸ் படைத் தலைவர் உடனே தலையிடக் குடும்பத்தினர் கோரிக்கை

Share:

கோலகுபுபாரு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மர்மமான முறையில் மரணமடைந்த 25 வயது இளைஞர் வினேஸ்வரன் ஜெயசங்கரின் மரணத்தில் நீதி கோரி அவரது குடும்பத்தினர் போலீசில் அதிர்ச்சிப் புகாரை முன் வைத்துள்ளனர்.

கடந்த மே 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, நோய் தடுப்புs சோதனைக்காக கோலகுபுபாரு சிறையில் வைக்கப்பட்டிருந்த கோம்பாக், பத்து லாப்பான், கம்சிங், இந்தியன் செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த வினேஸ்வரன், ஜூலை 19 அன்று கோலகுபுபாரு மருத்துவமனையில் இறந்து விட்டதாகப் போலீசார் கூறினர். எனினும், அவரது உடலில் கழுத்து நெரிப்பு, விலா எலும்புகள் முறிவு, மற்றும் ஆழமான குத்துக் காயங்கள் போன்ற கொடூரமான சித்திரவதைக்கான அடையாளங்கள் இருப்பதாகக் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.

இது குறித்து உயிரிழந்த வினேஸ்வரனின் சகோதரர் 29 வயது ஜே. மகேஸ்வரன் கூறுகையில், போலீஸ் துறை தங்களுக்குத் தெரிவித்த தகவல்களுக்கும், மருத்துவமனையில் தங்களுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரர் மருத்துவமனையில் இறந்தார் என்று போலீஸ் துறை தெரிவித்தாலும், மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே வெறும் உடலாக கொண்டு வரப்பட்டார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல், தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது என்று மகேஸ்வரன் தெரிவித்தார்.

தமது சகோதரரின் உடலில் ஏற்பட்ட காயங்களை நிரூபிக்க தங்களிடம் புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர சாட்சியங்கள் போன்ற வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் மகேஸ்வரன் மேலும் கூறினார்.

தங்களிடம் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் வினேஸ்வரனின் இறப்பு திடீர் மரணம் அல்ல. இது சிறைச்சாலைக்குள் நடந்த கொலை என்று மலேசிய தமிழர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீ ரமேஷ் வி. கண்ணன் குற்றஞ்சாட்டினார்.

எனவே, உண்மையிலேயே வினேஸ்வரனுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிய, கோலகுபுபாரு சிறைச்சாலை நிர்வாகம், அதன் இயக்குநர் மற்றும் சிறைச்சாலை இலாகாவின் தலைமை இயக்குநர் ஆகியோரை உடனடியாக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும். போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில், உடனடியாகத் தலையிட்டு விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஸ்ரீ ரமேஷ் வலியுறுத்தினார்.

Related News