கோத்தா திங்கி, அக்டோபர்.18-
சபா மாநிலத்திற்கு கூட்டரசு வருமானத்தில் 40 விழுக்காட்டுப் பங்கை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக வழங்கத் தவறியிருக்கும் கூட்டரசு அரசாங்கத்தின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று சபா, கோத்தா கினபாலு உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியுள்ள அதிரடித் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று சட்டச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்தார்.
இது குறித்து முடிவு எடுப்பது தமது அமைச்சு அல்ல. மாறாக, இது முழுக்க முழுக்க சட்டத்துறை அலுவலகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயமாகும் என்று அஸாலினா குறிப்பிட்டார்.
சபாவிடமிருந்து கூட்டரசு அரசாங்கம் வசூல் செய்யும் வருமானத்தில் 40 விழுக்காட்டை அந்த மாநிலத்திற்கே அது திரும்ப வழங்க வேண்டும் என்பது சட்டமாகும். ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக அந்த 40 விழுக்காட்டுத் தொகையை கூட்டரசு அரசாங்கம் வழங்கவில்லை. மாறாக, சிறப்புத் தொகை என்ற அடிப்படையில் ஒரு நிதி வழங்கப்படுவது சட்டத்தை மீறிய செயலாகும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ செலெஸ்தீனா ஸ்துவெல் காலிட் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருந்தார்.