வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பட்டதாரிகளின் குறைந்த தொடக்க ஊதியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவதுடன், அதிகரிக்கும் ஊதியச் செலவைச் சமாளிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியும் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ பி. கமலநாதன் வலியுறுத்தியுள்ளார்.
50க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள், பட்டதாரிகளின் ஊதியத்தை 1,700 ரிங்கிட்டிலிருந்து 2,200 ரிங்கிட்டாக உயர்த்தினால், அந்த ஊதிய உயர்வில் 50 விழுக்காட்டை 12 மாதங்களுக்கு அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று அவர் முன்மொழிந்துள்ளார்.
இதற்குச் சுமார் 800 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிட்ட கமலநாதன், இந்த நடவடிக்கை முறையான வேலை வாய்ப்பை ஊக்குவிப்பதுடன், ஊழியர்களின் இபிஎஃப் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கான பங்களிப்புகளையும் அதிகரிக்க உதவும் என்றார்.
மேலும், படிவம் 5 மற்றும் திவெட் மாணவர்கள் அனைவருக்கும் அரசாங்க நிதியில் செயற்கை நுண்ணறிவு கற்றல் கருவிகளுக்கான சந்தாவை வழங்க வேண்டும் என்றும், எம்ஐயிடி (MIED) உள்ளிட்ட சமூக அடிப்படையிலான கல்வி நிதிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட் இணை மானியம் வழங்க வேண்டும் என்றும் டத்தோ கமலநாதன் கோரியுள்ளார்.








