கோலாலம்பூர், நவம்பர்.28-
மலாக்கா நீரிணைக் கடலோரப் பகுதியில் மையம் கொண்ட Senyar புயலானது நேற்று நள்ளிரவில் சிலாங்கூர், நெகிரி செம்பிலான் கடலோரப் பகுதிகளில் கரையைக் கடந்த பின்னர், வலுவிழந்து, குறைந்த காற்றழுத்த வானிலை மண்டலமாக மாறியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.
இதனையடுத்து, தற்போது தீபகற்ப மலேசியாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள இந்த குறைந்த காற்றழுத்த மண்டலமானது, தென் சீனக் கடலை நோக்கி கிழக்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், மலேசியாவில் கனமழையும், பலத்த காற்றும் தொடர்ந்து வீசும் என்றும், பகாங், திரங்கானு கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.
இதனிடையே, Senyar புயலின் காரணமாக நெகிரி செம்பிலானில் பல்வேறு இடங்களில் சிறிய அளவிலான சேதங்கள் பதிவாகியுள்ளன.
சிரம்பான் 2, ஏயோன் மால் அருகே, மரம் ஒன்று சரிந்து விழுந்ததில், அதில் மோதி 61 வயது முதியவர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
அதே வேளையில், போர்ட்டிக்சன், Ehsan Sea View தங்கும் விடுதி அருகே, மரம் ஒன்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது சரிந்து விழுந்ததில் அந்தக் காரானது பலத்த சேதமடைந்தது.








