ஷா ஆலாம், ஆகஸ்ட்.15-
துன்புறுத்தலுக்கு ஆளாகி மரணமுற்று இருக்கலாம் என்று சந்தேகிகப்படும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகமான யுடிஎம் பயிற்சி மாணவன் ஷம்சூல் ஹாரிஸ் ஷம்சூடினின் உடலைத் தோண்டி எடுத்து, இரண்டாவது சவப் பரிசோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, அந்த மாணவனின் தாயார் ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தமது மகனின் உடலைத் தோண்டி எடுப்பதற்கு போலீசாரை நிர்பந்திக்கச் செய்யும் ஓர் உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற 45 வயது உம்மு ஹைமான் பீ டவுலாட்கன் என்ற அந்த மாது தனது வழக்கு மனுவில் தெரிவித்துள்ளார்.
மெஸ்ரே நாரன் சிங் அண்ட் கோ என்ற வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் உம்மு ஹைமான் இந்த வழக்கு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் மற்றும் சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முகமட் டுசுலி மொக்தார் ஆகியோரை வழக்கின் பிரதிவாதிகளாக அந்த மாது பெயர் குறிப்பிட்டுள்ளார்.
மகனின் உடல் மீதான சவப் பரிசோதனை கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சவப் பரிசோதனையின் போது, நாட்டின் முன்னணி தடயவியல் மருத்துவ நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் பூபிண்டர் சிங் மற்றும் தாங்கள் நியமித்துள்ள வழக்கறிஞர் டத்தோ நாரன் சிங் ஆகியோர் ஆஜராவதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் தமது வழக்கு மனுவில் உம்மு ஹைமான் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே வேளையில் மகனின் சவப் பரிசோதனை நடத்தப்பட்டப் பின்னர் அதன் முடிவு மீதான அறிக்கை ஒரு மாததிற்குள் தனது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜோகூர், உலு திராமில் உள்ள இராணுப் போர்ப் பயிற்சி மையத்தில் சேமப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி அளிப்புப் பிரிவில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வேளையில் கடந்த ஜுலை மாதம் 28 ஆம் தேதி 22 வயதுடைய மாணவன் ஷம்சூல் ஹாரிஸ் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
அவரின் உடலில், கடுமையாகத் தாக்கப்பட்டதற்கானக் காயங்கள் இருப்பதாக குடும்பத்தினர் கூறுகின்றனர். எனவே அவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று தாயார் உம்மு ஹைமான் வழக்கு தொடுத்துள்ளார்.








