Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜாலான் கிளாங் லாமா பகுதியில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான வாடிக்கையாளர் சேவையுடன், வெளிநாட்டினர் நடன நிகழ்ச்சிகளை வழங்கி வந்த கேளிக்கை மையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

அச்சோதனையில், 21 முதல் 31 வயதிற்குட்பட்ட 3 சீன நாட்டவர்கள் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டவர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் கூறுகையில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவல் மற்றும் கடந்த ஒரு மாதமாக உளவுத்துறை மேற்கொண்ட கண்காணிப்பைத் தொடர்ந்து இன்று அதிகாலை 12.05 மணியளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நால்வரிடமும் நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் அல்லது அனுமதிச்சீட்டுகள் இல்லை என்பது முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இந்த பொழுதுபோக்கு மையம், ஓரினச்சேர்க்கை சமூகத்தைச் சேர்ந்த வெளிநாட்டினரின் நடன நிகழ்ச்சிகளை வழங்கி, கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து வந்ததாக ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.

மேலும், பானங்கள் மற்றும் மேசை முன்பதிவு வகையைப் பொறுத்து வாடிக்கையாளர்களிடம் 53 முதல் 700 ரிங்கிட் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே தலைமையகம் மற்றும் கோலாலம்பூர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட 4 வெளிநாட்டினரும் மேலதிக நடவடிக்கைக்காக புத்ராஜெயா குடிநுழைவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் இந்த வழக்கு குடிநுழைவுச் சட்டம் 1959/63, பிரிவு 6(1)(c)-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

Related News