நீலாய், டிசம்பர்.23-
நெகிரி செம்பிலான், நீலாய், எச பால அடுக்குமாடிக் குடியிருப்பிலுள்ள வீடு ஒன்றில் இருந்து, நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கத் தேவையானதாக நம்பப்படும் மூன்று பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில், அப்பகுதியிலுள்ள கார் நிறுத்துமிடத்தில் நிகழ்ந்த வெடிச் சம்பவத்தையடுத்து, போலீசார் நடத்திய சோதனைகளில் இந்த வெடி பொருட்களானது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த வெடிப் பொருட்களைத் தயாரித்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்த வெடிச் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் அல்ஸாஃப்னி குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் யாரும் இது குறித்து வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், அது விசாரணைகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் அல்ஸாஃப்னி வலியுறுத்தியுள்ளார்.








