முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை அடிப்படையிலான மன்னிப்பு தொடர்பாக, கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகளை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்குவது குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை என உயர்கல்வி அமைச்சர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டு சிந்தனைக் கருத்தரங்கிற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களை அனுமதியின்றி வெளியிடுவது நாட்டிற்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான விவகாரம் என்றார்.
இது அரசியல் பிரச்சினையல்ல என்றும், அரசாங்கத்தின் ரகசிய ஆவணங்களின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான விவகாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, நஜிப்புக்கு வீட்டுக் காவல் அனுமதி வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான சட்டச் சவாலைத் தொடர்ந்து, மன்னிப்பு வாரியக் கூட்டக் குறிப்புகள் ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தக் கூட்டத்தில் சட்டத்துறை தலைவர் டான் ஶ்ரீ டுசுகி மொக்தார், அமைச்சர் ஹான்னா இயோ உள்ளிட்ட நால்வர் வீட்டுக் காவல் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.








