பினாங்கு – பேராக் மொத்த நீர் விநியோக ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதாக தற்போதைய முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் குறித்து மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் ஏற்கெனவே பலமுறை விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒப்பந்தத்தின்படி, பேராக் மாநிலத்திற்கு ஆண்டுதோறும் 210 மில்லியன் ரிங்கிட் வழங்க பினாங்கு கடமைப்பட்டுள்ளது. நீர் விநியோகத்தின் அளவைப் பொருட்படுத்தாமல், 40 ஆண்டுகளுக்கு இந்தக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என லிம் குவான் எங் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதன் மொத்த மதிப்பு 8.4 பில்லியன் ரிங்கிட் என்றும், நீர் விநியோகம் இல்லாவிட்டாலும் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டிய நிலை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் லிம் குவான் எங் வலியுறுத்தியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சாவ் கோன் இயாவ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஏற்கெனவே மாநிலச் சட்டமன்றக் கூட்டங்களில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.








