சொங்க்லா, நவம்பர்.23-
தாய்லாந்தின் Hatyaiயில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சுமார் 4,000 மலேசியப் பயணிகள் சிக்கியுள்ளதாகவும், இவர்களை மீட்கும் நடவடிக்கைகளை மலேசிய அரசு முடுக்கிவிட்டுள்ளதாகவும் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். அங்குள்ள மலேசியத் தூதரகங்கள் மூலம் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 40 ஆசிரியர்களையும் மாணவர்களையும் உள்ளடக்கிய சிக்கித் தவிப்பவர்களை விரைவாக நாட்டுக்குக் கொண்டு வர ஒருங்கிணைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தேசிய அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் நவம்பர் 13 முதல் தயார் நிலையில் உள்ளன என்றும், அதிகனமழைக்கான எச்சரிக்கை மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கிளந்தான், திரெங்கானு, பகாங், பெர்லிஸ் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தொடக்கக்கட்ட எச்சரிக்கையைப் பின்பற்றி, உயிரிழப்பையும் உடைமை இழப்பையும் தவிர்க்குமாறு ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார்.








