கோலாலம்பூர், டிசம்பர்.02-
ஆம்பெங்க் வங்கியின் ஐந்தடியில் உறங்கிக் கொண்டிருந்த போது வங்கியின் பெண் பாதுகாவலர் உட்பட இருவரால் குழாய் நீர்ப்பாய்ச்சி, அவமதிப்பு செய்த சம்பவம் தொடர்பில் வைரலான காணொளியில் பரிதாபக் கோலத்தில் காணப்பட்ட ஓர் இந்தியப் பிரஜைகளை வேலைக்கு அமர்த்திய முன்னாள் முதலாளி விசாரணை வளாகத்தின் கொண்டு வரப்படுவார் என்று மனித வள அமைச்சின் ஆள்பல இலாகா தெரிவித்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவரான சைபுடின் பக்கீர் என்ற அந்த இந்தியப் பிரஜை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சிலாங்கூர், ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஓர் உணவகத்தில் சைபுடின் ஒரு சமையல்காரராக வேலை செய்து வந்துள்ளார்.
அவரின் கடப்பிதழைழையும் சம்பளத்தையும் கொடுக்காமல் முதலாளி மாதக் கணக்கில் பிடித்தம் செய்து வந்ததாகத் தெரிய வந்துள்ளது. வேலை பெர்மிட்டை புதுப்பித்துக் கொடுப்பதற்கு மாதம் தோறும் சம்பளத்தில் 1,800 ரிங்கிட்டை முதலாளி பிடித்தம் செய்த போது வேலைக்கு செல்வதை சைபுடின் நிறுத்திக் கொண்டார்.
அதன் பிறகு நண்பர்களின் வாடகை வீடுகளில் சைபுடின் தங்கி வந்துள்ளார். எனினும் நண்பர்களும் கதவடைப்பு செய்து விட்டதால், கடப்பிதழ் கைவசம் இல்லாத நிலையில் எங்கும் வேலைக்கு செல்ல இயலாமல் சைபுடின் வறுமை பிடியில் சிக்கி, ஐந்தடிப் பாதையில் நாட்களை கழித்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதன் தொடர்பில் சைபுடினை வேலைக்கு அமர்த்திய முன்னாள் முதலாளிக்கு எதிராக 1955 ஆம் ஆண்டு தொழில் சட்டம் மற்றும் 1990 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச வீட்டு வசதி மற்றும் தங்கும் வசதி சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது என்று ஆள்பல இலாகா அறிவித்துள்ளது.
சைபுடினுக்கு சேர வேண்டிய சம்பளத்தை அவரின் முதலாளி செலுத்தி விட்டார். அவர் தமிழ்நாட்டிற்குச் செல்வதற்கான விமான டிக்கெட் செலவையும் ஏற்றுக் கொண்டார். சைபுதீன் இன்றிரவு தமிழ்நாடு புறப்படுகிறார். சைபுடின் சம்பந்தப்பட்ட இந்த வழக்கு தீர்க்கப்பட்ட போதிலும் சைபுடினின் முன்னாள் முதலாளி விசாரணைக்கு ஆளாகியுள்ளார் என்று ஆள்பல இலாகா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








