கணவன் மனைவி கைது
வீட்டுப் பணிப் பெண் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களான கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஜாங், தாமான் தெனாகா என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் அந்த இந்தோனேசியப் பணிப்பெண் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணைக்கு பின்னர் வீட்டு உரிமையாளர்களான 50 வயது கணவனும் , 40 வயது மனைவியும் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு ஏதுவாக கணவன், மனைவியை இரண்டு நாள் தடுத்து வைக்கப்படுவதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.
அந்த அடுக்கு மாடி வீட்டில் உதவிக் கோரி, ஒரு பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட பொது மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து, சோதனை செய்த போது 40 வயது இந்தோனேசியப் பணிப்பெண் குளியல் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, சோர்வுற்று கிடந்தது தெரியவந்தது என்று ஹுசேன் ஒமார் தெரிவித்தார்.
வீட்டில் நகைகளைத் திருடி விட்டதாக சந்தேகத்தின் பேரில் அந்த பணிப்பெண்ணை சம்பந்தப்பட்ட தம்பதியர் சங்கிலியில் பிணைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளாக அவர் மேலும் கூறினார்.








