ஷா ஆலாம், ஆகஸ்ட்.01-
காஜாங்கில் ஓர் இடைநிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவரை இரண்டாம் படிவ மாணவன் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களின் தவறான நடத்தையில் கல்வி அமைச்சு ஒரு போதும் சமரசப் போக்கை கடைப்பிடிக்காது என்று அதன் அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் மீண்டும் நினைவுறுத்தியுள்ளார்.
மாணவர்களிடையே தவறான புரிதல் காரணமாக பள்ளித் தரப்பினரும், அமலாக்கத் தரப்பினரும் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாக இந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது என்று தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஃபாட்லீனா குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் போலீசார் இதுவரை நான்கு மாணவர்களைக் கைது செய்து இருப்பதாக அவர் விளக்கினார்.
இவ்விவகாரத்தில் போலீசாரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கவிருப்பதையும் ஃபாட்லீனா தெளிவுபடுத்தினார்.








