இன்று அதிகாலை சிரம்பானில் உள்ள தாமான் புக்கிட் செரி செனாவாங்கில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் முகமூடி அணிந்த இரு ஆடவர்கள் பாராங்கத்தியைக் கழுத்தில் வைத்து மிரட்டி நகை, பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளான்.
அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம் நடக்கும்போது தமது 9 வயது மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாகத் 39 வயது தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.
பயத்தால் நடுங்கிய தமிழ்ச்செல்வி இது போன்ற சூழலை முதன் முறையாகத் தமது வாழ்க்கையில் எதிர்கொண்டதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
மகனின் கழுத்த நெரித்தவாறு, தமது கழுத்தில் பாரங்கத்தியை வைத்து பணம், நகை எல்லாம் எங்கே என அந்தத் திருடர்கள் மிரட்டியதாகவும் அவற்றைத் தேடி வீட்டையே அலங்கோலப்படுத்தியதாகவும் தமிழ்ச்செல்வி குறிப்பிட்டார்.
தங்கள் இருவரின் கை, கால்களைக் கட்டி வாயையும் மூடியதாகவும் 45 நிமிடங்கள் கழித்து 10 ஆயிரம் வெள்ளிக்கும் மேற்பட்ட பணம், நகை, தமது பெரோடுவா பேசா வகைக் கார். வீட்டு சாவிக் கொத்து ஆகியவற்றைக் களவாடி தப்பி விட்டதாகவும் தமிழ்ச்செல்வி கூறினார்.
திருட வந்த இருவரில் ஒருவன் மெலிந்த உடல் வாகும் உயரமாகவும் இருந்ததாகத் தெரிவித்தத் தமிழ்ச்செல்வி, மற்றொருவன் குட்டையாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அவர்கள் பேசியதை வைத்து இருவரும் உள்ளூர்வாசிகள் என சந்தேகிப்பதாகவும் தமிழ்ச்செல்வி மேலும் சொன்னார்.
இந்நிலையில், சிரம்பன் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி குணசேகரன் இவ்விவகாரம் குறித்து கருத்துரைக்கயில், இஃது அப்பகுதியில் நடந்த இரண்டாவது திருட்டுச் சம்பவம் என்றும், குடியிருப்பாளர்கள் விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையில், சிரம்பன் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், சுபெரிதென்டன் முஹமாட் ரொஸ்லி இஷாக் தகவல் அளிக்கயில், இச்சம்பவம் தொடர்பாகத் தமக்குப் புகார் கிடைத்திருப்பதாகவும், குற்றவியல் சட்டம் 392, 397 இன் படி விசாரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.








