Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தீபாவளிக் கொண்டாட்டம்
தற்போதைய செய்திகள்

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தீபாவளிக் கொண்டாட்டம்

Share:

புத்ராஜெயா, அக்டோபர்.14-

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, இன்று செவ்வாய்கிழமை, புத்ராஜெயாவில் அமைச்சின் வரவேற்பு மண்டபத்தில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தை மிக உற்சாகமாகவும், குதூகலமாகவும் நடத்தியது.

அமைச்சு அளவில் நடைபெற்ற இந்த தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்விற்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமை வகித்தார்.

இந்த வருடாந்திர தீபாவளி நிகழ்வு வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, மலேசிய சமூகத்தின் தூணாக இருக்கும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் தெளிவான வெளிப்பாடாகும்.

இனங்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதையும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் பணியாளர்களிடையே பரஸ்பர மரியாதையை வளர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அமைச்சின் குடும்ப உணர்வை வலுப்படுத்தியுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் ங்கா கோர் மிங், 2025 ஆம் ஆண்டின் ஹரி சூச்சி மலேசியா திட்டத்தில் அடையப் பெற்ற வெற்றியும், அது மலேசிய சாதனைப் புத்தகத்தில் இரண்டு சாதனைகளைப் பதிவு செய்து வரலாறு படைத்திருப்பதையும் ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் இந்த சாதனை இரண்டு வருட காலத்திற்குள் அடையப்பட்ட ஐந்து ஒட்டுமொத்த MBOR பதிவுகளின் தொகுப்பில் சேர்க்கப்பட்டு இருப்பதையும் ங்கா கோர் மிங் சுட்டிக் காட்டினார்.

ஹரி சூச்சி மலேசியா திட்டத்தின் இரண்டு சாதனைகள் குறித்து விவரித்த ங்கா கோர் மிங், கோத்தோங் ரோயோங் துப்புரவுத் திட்டத்தில் ஒரே நேரத்தில் மக்களின் மிகப் பெரிய பங்கேற்பு நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் ஒரு லட்சத்து 817 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 58 ஆயிரத்து ஏழு பேர் பங்கேற்ற 2024 ஆம் ஆண்டு சாதனையை இது முறியடித்துள்ளது என்று ங்கா கோர் மிங் விளக்கினார்.

இரண்டாவது சாதனையானது, ஒரே நாளில் சேகரிக்கப்பட்ட மிகப் பெரிய அளவிலான மறுசுழற்சி செய்யக்கூடிய சமையல் எண்ணெய்யாகும். ஜோகூர், கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேராக், பெர்லிஸ், சிலாங்கூர், திரெங்கானு மற்றும் கோலாலம்பூர் உள்ளிட்ட 10 மாநிலங்களிலிருந்து 79 ஆயிரத்து 684 ரிங்கிட் 56 காசு மதிப்புள்ள 27 ஆயிரத்து 679.31 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டது என்று அமைச்சர் ங்கா கோர் மிங் பெருமிதம் தெரிவித்தார்.

இந்தச் சாதனை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல, நாடு சுத்தமாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதிச் செய்வதற்கான ஒற்றுமை மற்றும் மலேசியர்களின் பகிரப்பட்ட கூட்டு பொறுப்புகளின் சின்னமாகும். சமூகத்தின் மத்தியில் தூய்மை கலாச்சாரம் பெருகி இருப்பதை இது நிரூபிக்கிறது என்று ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.

Related News