பாங்கி, ஆகஸ்ட்.09-
சபா, பாபார், துன் டத்து முஸ்தபா, சமய தேசிய இடைநிலைப்பள்ளியின் முதலாம் படிவ மாணவியான 13 வயது ஸாரா கைரினா மகாதீர் மரணத்தில் தனது மகளுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை சபா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் அரிஃபின் முகமட் அரிஃப் மறுத்துள்ளார்.
பாபாரில் உள்ள ஸாரா கைரினா படித்த பள்ளியில் தனது மகள் பயிலவில்லை என்றும், அந்த மாணவியின் மரணத்தில் தொடர்பு இருப்பதாகப் பகிரப்பட்டு வரும் பெயர், தனது மகள் அல்ல என்றும் அந்த சபா அமைச்சர், இன்று மாலையில் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜுலை 16 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தாம் தங்கியிருந்த பள்ளி ஹாஸ்டலின் மூன்றாவது மாடியிலிருந்து ஸாரா கைரினா கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
கடுமையான காயங்களுடன் கோத்தா கினபாலு, குயின் எலிஸபெத் 1, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி மறுநாள் மரணமுற்றார்.
அந்த மாணவி சொந்தமாகக் கீழே விழுந்தாரா, யாராவது தள்ளிவிட்டார்களா-? அல்லது பகடி வதை செய்யப்பட்டரா? என்பது குறித்து தற்போது போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து இன்று கருத்துரைத்த பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இதன் பின்னணியில் யாருடைய பிள்ளையாக இருந்தாலும் சரி, அவர் ஓர் அமைச்சரின் பிள்ளையாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி, அதைப் பற்றித் தமக்குக் கவலையில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து இருந்தார்.







