நாட்டில் பல வழித்தடங்களில் வாகனங்கள் நிற்காமல் டோல் கட்டணம் செலுத்தும் முறையை முழுமையாகச் செயல்படுத்தும்போது, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலேக்ஸண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழில்நுட்பம், கூட்டரசு மற்றும் மாநிலச் சாலைகளின் நிர்வாகம், திட்டமிடல், பராமரிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற 13ஆவது மலேசிய சாலை மாநாடு மற்றும் 6ஆவது ஆசிய பசிபிக் சாலை மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். சாலைப் பொறியியல் தொடர்பான 121 ஆய்வுக் கட்டுரைகளும், 112 கண்காட்சிக் கூடங்களும் இடம்பெற்றுள்ளன.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தரமான, நீடித்த மற்றும் நிலையான சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், உள்ளூர் பொறியாளர்களின் திறனையும் மேம்படுத்துவது மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.








