நாட்டில் மக்களின் ஆரோக்கியம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதித்து வரும் புகைமூட்டத்தைத் தேசிய நெருக்கடியாகக் கருதி விவாதிக்க, மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங் முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு, மக்களவைத் துணைத் தலைவர் ரம்லி முகமது நோர் அனுமதி வழங்கினார். இதையடுத்து, இந்த விவகாரம் இன்று பிற்பகல் சிறப்பு அறையில் விவாதிக்கப்படவுள்ளது.
கடந்த ஆகஸ்ட் தொடக்கத்திலிருந்து நீடிக்கும் புகைமூட்டத்தால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய கூ போய் தியோங், சில இடங்களில் காற்றுத் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மற்றும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
காலிமந்தான், சுமத்ரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயின் புகையே இதற்குக் காரணம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.








