மைஇஜி செண்டிரியான் பெர்ஹாட் மற்றும் ஸெட்ரிக்ஸ் ஏஐ பெர்ஹாட் நிறுவனங்கள் சாலைப் போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவிற்கு செலுத்த வேண்டிய 31.4 கோடி ரிங்கிட் நிலுவைத் தொகை தொடர்பாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம், போலீஸ் துறையுடன் இணைந்து விசாரணை நடத்தவுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை அதிகாரப்பூர்வ புகார் கிடைத்ததாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது. தங்களது அதிகார வரம்புக்கு உட்பட்ட தகவல்களை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டு விசாரணையை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஊழல் தொடர்பான அம்சங்கள் இருப்பதற்கான தகவல்கள் கிடைத்தால், அவற்றைப் போலீஸ் துறை பகிர்ந்து கொள்ளும் என்றும் எஸ்பிஆர்எம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான தகவல்களைக் கொண்டவர்கள் முன்வந்து தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் சட்டத்திற்கு உட்பட்டும் நடத்தப்படும் என எஸ்பிஆர்எம் உறுதியளித்துள்ளது.








