கெடா, கூலிம், பண்டார் புத்ரா பகுதியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இணையவழி மோசடி அழைப்பு மையத்தைப் போலீஸ் முறியடித்து, 53 பேரைக் கைது செய்துள்ளது. இந்த மோசடியால் 73 பேர் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 14 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 48 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 20 முதல் 51 வயதுக்கு உட்பட்ட மலேசியா, பாகிஸ்தான், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கெடா மாநிலத் தலைமைக் போலீஸ் அதிகாரி டத்தோ அட்ஸ்லி பின் அபு ஷா தெரிவித்தார்.
இந்தியப் போலீஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டினரிடம் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இக்கும்பலிடமிருந்து, 89 கைப்பேசிகள், சீருடைகள், கணினிகள், உள்ளிட்ட மின்னணுச் சாதனங்களையும் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. அவற்றின் மதிப்பு சுமார் 70 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.








