ஜோகூர் பாரு, செப்டம்பர்.26-
ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் Palapes ( பலாபெஸ் ) பயிற்சி மாணவர் ஷம்சூல் ஹரிஸ் ஷம்சுடின் மரணம் தொடர்பான விசாரணை முடியும் வரையில் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
அந்த மாணவரின் 45 வயது தாயார் உம்மு ஹைமான் பீ டவுலாட்கான் தாக்கல் செய்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதிவாதிகள், இந்த உடன்பாட்டிற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த மாதுவின் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் தெரிவித்தார்.
பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகியுள்ள கூட்டரசு முதிர்நிலை வழக்கறிஞர் ரொஸிஸா சிடேக் வழங்கிய அந்த உடன்பாட்டிற்கான நகல் கடிதத்தைத் தாங்கள் பெற்றுள்ளதாக நரான் சிங் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் பயிற்சி மாணவரின் மரணம் தொடர்பில் தற்காப்பு அமைச்சரும், தற்காப்பு அமைச்சும், தகவல் சாதனங்களின் எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்பதற்கு உடன்பட்டுள்ளனர் என்று நரான் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.








