பட்டர்வொர்த், செப்டம்பர்.20-
சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ, பினாங்கு, செபெராங் ஜெயாவில் டையலிசிஸ் மையத்தை அமைத்து இருப்பது, சிறுநீரக பாதிப்பை எதிர்நோக்கியுள்ள வட மாநிலத்தில் உள்ள சொக்சோ சந்தாதாரர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
சிறுநீரக நோயாளிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சையை அளிக்க வல்ல இந்த டையலிசிஸ் மையம், நாள் ஒன்றுக்கு சராசரி 36 நோயாளிகள் டையலிசியஸ் சிகிச்சை பெறுவதற்குரிய வசதியைக் கொண்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
இந்த மையத்தில் டையலிசியஸ் சிகிச்சையைப் பெறும் சொக்சோ சந்தாதாரர்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. அதற்குரிய செலவினத்தை சொக்சோ நிறுவனமே ஏற்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
செபராங் ஜெயா மருத்துவமனை, புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மிக அருகிலேயே இருப்பதால் வியூகம் நிறைந்த இடத்தில் செபராங் ஜெயா டையலிசியஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று சனிக்கிழமை செபராங் ஜெயா டையலிசியஸ் மையத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றுகையில் ஸ்டீவன் சிம் மேற்கண்டவாறு கூறினார்.








