கோலாலம்பூர், ஜூலை.12-
மலேசிய குடிநுழைவுத்துறை, கோலாலம்பூரில் மேற்கொண்ட இரு வெவ்வேறு சோதனை நடவடிக்கைகளில் அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிஎல்கேஎஸ் எனப்படும் வேலை வருகைக்கான தற்காலிக அனுமதி அட்டை விண்ணப்பத்திற்கான சேவையை வழங்கியது தொடர்பில் இரு கும்பல்களை முறியடித்துள்ளது.
ஸாகீர் மற்றும் ஷாஹிட் என்ற அந்த இரு கும்பல்கள் குறுக்கு வழியில் ஆதாயத்தை ஈட்டுவதற்கு கிள்ளான் பள்ளத்தாக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக செயல்பட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
முதல் சோதனை மதியம் 12 மணியளவில் ஜாலான் புடுவில் உள்ள ஓர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்தார்.
ஸாகீர் என்ற இந்த கும்பல் பிஎல்கேஎஸ் அட்டையைப் பெற்று தருவதற்கு இடைத் தரகராகச் செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்நிய நாட்டவர்களுக்கு பிஎல்கேஎஸ் அட்டையைப் புதுப்பிப்பதற்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 2,500 ரிங்கிட் முதல் 6,000 ரிங்கிட் வரை சேவைக் கட்டணமாக வசூலித்து வந்துள்ளது.
இரண்டாவது சோதனை நேற்று இரவு 7 மணியளவில் அம்பாங் பாருவில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஷாஹிட் என்ற கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர். இதில் 33 க்கும் 43 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பாகிஸ்தான் ஆடவர்களும், ஒரு மியன்மார் பிரஜையும் கைது செய்யப்பட்டதாக டத்தோ ஸாகாரியா குறிப்பிட்டார்.
இந்தக் கும்பல்கள் முறியடிக்கப்பட்டது மூலம் 130 வங்காளதேசக் கடப்பிதழ்கள், மூன்று இந்தோனேசியா கடப்பிதழ்கள் மற்றும் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் விளக்கினார்.








