குவாந்தான், பிப்ரவரி.20-
குவாந்தான், 10-ஆவது மைல் ராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 22 வயது ராணுவ வீரர், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார்.
கே. இந்திரன் என்ற அந்த பயிற்சி வீரர், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முகாமில் மயக்கமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனை முடிந்து விட்டது. உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை. பயிற்சி வீரரின் இறப்பு, திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று யஹாயா ஒத்மான் இன்று கூறினார்.
சமூக ஊடகங்களில் இந்திரனின் மரணம் பகடிவதை தொடர்புடையது என்று பரவி வரும் தகவல்களுக்கு மத்தியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு வந்திருந்த இந்திரனின் குடும்பத்தினர், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக பினாங்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகளைச் செய்தனர்
கடந்த 2016-ஆம் ஆண்டு பினாங்கு, பட்டர்வொர்த் விமான தளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த அரச மலேசிய விமானப்படை விமானி சி. காயம்புவின் மகன் இந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் 2024 செப்டம்பரில் போர்ட் டிக்சனில் தனது அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்த 1,144 வீரர்களில் ஒருவராவார்.
இந்திரன் மயக்கமடைவதற்கு ஒரு நாளைக்கு முன்புதான் அவரிடம் கடைசியாகப் பேசியதாக அவரது வளர்ப்புத் தந்தை 35 வயது எல். மதிவாணன் தெரிவித்தார்.
"நாங்கள் வீடியோ காலில் பேசினோம், அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார். அடுத்த மாதம் குடும்ப ஒன்றுகூடலுக்கு கூட இந்திரன் திட்டமிட்டிருந்தார்," என மதிவாணன் உருக்கத்துடன் கூறினார்.








