ஜாசின், ஏப்ரல்.19-
ஜாசின், ஜாலான் செலாண்டார் – பாத்தாங் மலாக்கா பகுதியில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், Muhammad Azraf Azhar என்ற 21 வயது தொழிற்சாலை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆயர் கெரோவில் உள்ள தனது பணியிடத்திலிருந்து வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரத் தடுப்பில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டதாகக் காவற்படை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்த அவரது உடல், உடற்கூறு ஆய்விற்காக ஜாசின் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்த விபத்து குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜாசின் காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் லீ ராபர்ட் தெரிவித்தார்.








