ஈப்போ, நவம்பர்.04-
போக்குவரத்து போலீஸ்காரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்த இரண்டு ஆடவர்கள், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
போலீஸ்காரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்த காட்சியைக் கொண்ட காணொளி ஒன்று, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அவ்விருவரையும் போலீசார் கைது செய்து இன்று நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
24 வயது வோங் ஜுயூன் வேய் மற்றும் 40 வயது லிம் பூன் பிங் என்ற அவ்விரு நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு, மொழிப் பெயர்ப்பாளரின் உதவியுடன் காண்டொனிஸ் மொழியில் வாசிக்கப்பட்டது.
சாலை போக்குவரத்து குற்றங்களைப் புரிகின்றவர்களை மடக்கி, சம்மன் வெளியிடாமல் இருக்கவும், போலீஸ் நிலையத்திற்குக் கொண்டுச் செல்வதைத் தவிர்க்கவும், பணம் கேட்டு போக்குவரத்து போலீஸ்காரர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்ததாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
அவ்விருவரும் கடந்த நவம்பர் முதல் தேதி அதிகாலை 12.38 மணியளவில் ஈப்போ, தாமான் ஈப்போ திமோர் பாரு, ஜாலான் லெபோ பெர்சான் செலாத்தான் 1 இல் ஓர் உணவகத்தின் முன்புறம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 7 ஆண்டுச் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.








