கூலிம், பிப்ரவரி.16-
கெடா மாநிலத்தில் 2025 ஆண்டில் நடைபெற்ற ரஹ்மா விற்பனை மூலம் 46 லட்சம் ரிங்கிட் பெற்றத்துடன் அதில் 700,000 மக்கள் பயன் அடைந்திருப்பதாக உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் செனட்டர் டத்தோ டாக்டர் ஃபௌஸியா சாலே தெரிவித்தார் . ரஹ்மா விற்பனை மடானி அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். மக்களின் வாழ்க்கைப் பின்னணியைப் பார்க்காமல் அனைவரும் பயனடைவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட திட்டமாகும் என்றார்.

அண்மையில் கூலிம் மாவட்டத்தில் அமைந்துள்ள கெலாடி மினி ஸ்தேடியம் ( Mini Stadium) 13/2/2026 ஆம் திகதி தொடங்கி 15/2/2026 ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான ரஹ்மா விற்பனை 3.0 நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார் செனட்டர் டத்தோ டாக்டர் ஃபௌஸியா சாலே. கடந்தாண்டு 222 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 600 சட்டமன்ற தொகுதிகளிலும் 40 கூட்டரசு பிரேதசத்திலும் இந்த ரஹ்மா விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது என்றார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை கெடா மாநிலத்தில் மட்டும் 298 இடங்களில் இந்த ரஹ்மா விற்பனை நடைபெற்றுள்ளது.

2026 ஆம் ஆண்டில் கெடா மாநிலம் 1800 ரஹ்மா விற்பனை கடைகளுக்கு இலக்குக் கொண்டுள்ளது. அதன் மூலம் 1 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் என்று நம்பிக்கை இருப்பதாக ஃபௌஸியா சாலே குறிப்பிட்டார் . எனவே, இந்த ரஹ்மா விற்பனை 3.0 மூலம் 2.5 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பொருட்கள் விற்பனை ஆகும் என்று கெடா மாநில உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு நம்பிக்கைக் கொண்டுள்ளது . இவ்விற்பனை மூலம் 150,000 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள்.








