கோலாலம்பூர், அக்டோபர்.04-
கோலாலம்பூரில் உள்ள விஸ்மா டாமான்சாரா மறுமேம்பாட்டுத் திட்டத்தை எதிர்த்து இன்று சனிக்கிழமை காலையில் புக்கிட் டாமன்சாராவில் வசிக்கும் முக்கியப் புள்ளிகள் உட்பட 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னாள் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், ஏர் ஆசியா கெப்பிட்டல் தலைமை செயல்முறை அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் சகோதரரும், ஆசியான் வணிக ஆலோசனைக் குழுமத்தின் தலைவருமான டான் ஶ்ரீ நஸிர் ராஸாக், பிரபல பாடகி டத்தோ ஷீலா மஜித் ஆகியோர், போராட்டத்தில் குதித்தவர்களில் அடங்குவர்.
கோலாலம்பூர், டாமன்சாரா, ஜாலான் செமந்தான் 2 இல் வியூகம் நிறைந்த பகுதிகளில் பல்வேறு சுலோகங்களைத் தாங்கிய அட்டைகளையும், பதாகைகளையும் ஏந்திய வண்ணம், விஸ்மா டாமான்சாரா மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு அவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவுச் செய்தனர்.
மிக அமைதியாகவும், சமூகமாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைக் கண்காணிக்க ரேலா அதிகாரிகள் உட்பட சுமார் 50 போலீசார் கடமையில் அமர்த்தப்பட்டனர்.
விஸ்மா டாமா – மறுமேம்பாட்டுத் திட்டம், 60 மாடிகளைக் கொண்ட இரண்டு கோபுரங்களாக வடிவமைக்கப்படும் என்று தாம் கேள்விப்பட்டதாக கைரி ஜமாலுடின் குறிப்பிட்டார்.
அந்தக் கட்டடம் இடிபடக்கூடாது. ஒரு பாரம்பரியப் பகுதியாக அங்கீரிப்பது உட்பட அது பாதுக்கப்பட வேண்டும் என்ற பலர் விரும்புகின்றனர். உதராணத்திற்கு அது Brutalis கலை வேலைப்பாடு கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று கைரி குறிப்பிட்டார்.
ஏர் ஆசியா கெப்பிடல் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், தாம் நீண்ட காலமாக டாமன்சாராவில் வசித்து வருவதாகக் கூறினார். நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை டாமன்சாராவில் கழித்து, இந்தப் பகுதியில்தான் வசித்து வருகிறேன்.
இங்கு போக்குவரத்து ஏற்கனவே மோசமாக உள்ளது. யாரும் வளர்ச்சித் திட்டத்தை தடுக்கப் போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், ஒரு சிறிய பகுதியில் பல மாடி கோபுரங்கள் மிக அதிகம், இப்பகுதி ஓர் அமைதியான சூழலில் சிறு பகுதியாக இருக்கவே விரும்புகிறேன் என்றார் டோனி பெர்னாண்டஸ்.








