புத்ராஜெயா, ஜூலை.18-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்துள்ள ஒரு கூடுதல் அரசாணை உத்தரவு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு தாம் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அந்த அரசாணை உத்தரவு தொடர்பில் எடுக்க வேண்டிய எந்தவொரு நடவடிக்கை குறித்தும் அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த தலைவர்களுடன் விவாதிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஆனால், இந்த விவகாரம் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே நீதிமன்றத்தை முந்திச் செல்லத் தம்மால் இயலாது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
நஜீப்பிற்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அரசாணை உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அம்னோவின் 160 தொகுதிகளின் தலைவர்கள் நேற்று இரவு ஒரு சேர, பிரதமர் அன்வாரை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான் அப்துல்லா பிறப்பித்துள்ள கூடுதல் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் அன்வார் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோலாலம்பூரில் திரண்ட அம்னோ டிவிஷன் தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இவ்விவகாரத்தில் இரண்டு விஷயங்களைத் தாம் தெளிவுபடுத்த முடியும் என்று அன்வார் கூறினார். ஒன்று, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தம்மால் இப்போதைக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க இயலாது. இரண்டாவது , இந்த விவகாரம் குறித்து அம்னோ தலைவர் மற்றும் துணைத் தலைவருடன் விவாதிக்கத் தாம் தயாராக இருப்பதாக அன்வார் விளக்கினார்.
இன்று புத்ராஜெயாவில் உள்ள பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.








