கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கலவரம் புரிந்ததாக ஒன்பது ஆடவர்கள் மலாக்கா, அயேர் கெரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில் அவர்களின் இருவர் காயத்திற்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.
மரணத்தை விளைவிக்கக்கூடிய அபாயகர ஆயுதத்தை பயன்படுத்தி 43 வயது மகேந்திரன் , 37 வயது என். மூர்த்தி ஆகியோருக்கு காயம் விளைவித்ததாக 24 வயது P. கோகிலநாதன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
கோகிலநாதன் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி நள்ளிரவு 12.32 மணியளவில் ஜாசின், தாமான் அயேர் மெர்பாவ் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் பாராங், இரும்பு, மரக்கட்டை ஆகியவற்றை பயன்படுத்தி கலவரத்தை விளைவித்ததாக 30 வயது ஏ. லோகேஸ், 26 வயது வி. மேகன், 26 வயது ஆர். தீவன், 33 வயது பி. மகேந்திரன், டி. தேவேந்திரன் மற்றும் 28 வயது எம். குகன் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேற்கண்ட முகவரியில் உள்ள அதே இடத்தில், அதேதினத்தன்று இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஐந்து ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.








