ஷா அலாம், ஜூலை 15 -
ALLAH என்ற வார்த்தையை காட்சியகப்படுத்தும் காலுறையை விற்பனை செய்து, முஸ்லிம் மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த KK Supermart சங்கிலித் தொடர்பு கடைகள் குழுமத்தின் தோற்றுநர், அவரின் மனைவி மற்றும் இதர மூன்று இயக்குநர்கள் ஆகிய ஐவரை ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று விடுதலை செய்தது.
சர்ச்சைக்குரிய காலுறையை விற்பனை செய்த நிறுவனம் மற்றும் அந்த காலுறையை விநியோகித்த நிறுவனம் என்ற அடிப்படையில் இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ஐவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்கள் கடந்த மே 17 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அந்த ஐவரையும் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
KK Supermart சங்கிலித் தொடர்பு கடைகள் குழுமத்தின் தோற்றுநர் டத்தோ ஸ்ரீ டாக்டர் கீ கன் சாய், அவரின் மனைவி சியூ முய் மற்றும் ஜோகூர் பத்து பஹாட் - ஐ தளமாக கொண்ட காலுறை விநியோகிப்பு நிறுவனமான Xin Jian Chang Sdn. Berhad- டின் இயக்குநர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.
சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவ மனுவைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மீட்டுக்கொள்ள சட்டத்துறை அலுவலகம் முடிவு செய்து இருப்பதாக பிராசிகியூஷன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
எனினும் காலுறையை விற்பனை செய்த KK Supermart / Super Store மற்றும் காலுறையை விநியோகித்த Xian Jian Chang ஆகிய நிறுவனங்களுக்கு நீதிமன்றம் தலா 60 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.








