மலேசியாவின் முன்னணி கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான ஐஜேஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-இன் 73 வயதான தலைவர் கிரிஷ்ணன் டான், அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் மீண்டும் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதால், தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார்.
2026-ஆம் ஆண்டிற்கான ஐஜேஎம் ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ள தனது இறுதி தலைவர் அறிக்கையில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமையுடனும் நன்றியுடனும் நினைவுகூருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் இணைந்து உருவாக்கிய வளர்ச்சியை பெருமையுடன் நினைவுகூர்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் வலுவான நிலையில் நிறுவனத்தை விட்டுச் செல்கிறேன் என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு அவர் அதிகாரப்பூர்வமாக பதவியிலிருந்து விலகுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 1984-ஆம் ஆண்டு ஐஜேஎம் இயக்குநர் குழுவில் இணைந்த கிரிஷ்ணன் டான், பின்னர் துணை நிர்வாக இயக்குநர், குழும நிர்வாக இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக துணைத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.
அதேவேளையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நிர்வாகத்தில் இடம்பெறாத துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட அவர், 2019-ஆம் அண்டு ஆகஸ்டில் தலைவராக உயர்த்தப்பட்டார்.
நிறுவனத்தை வழிநடத்திய சமீப காலங்களில், சன்வே பெர்ஹாட் நிறுவனத்தின் கையகப்படுத்தும் முயற்சி நிராகரிக்கப்பட்டதும், தன்னையும் IJM-யையும் தொடர்புபடுத்தி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மேற்கொண்ட விசாரணையும், தமது முடிவுக்கு முக்கிய நிகழ்வுகளாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த விசாரணையின் முடிவில், தன்னிடமோ நிறுவனத்திடமோ எந்தத் தவறும் இல்லை என உறுதி செய்யப்பட்டு, மேலதிக நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று எஸ்பிஆர்எம் தீர்மானித்தது.
இந்நிலையில், நிறுவனத்தின் நல்லாட்சி, நேர்மை மற்றும் உயர்ந்த ஒழுக்கநெறி நிலைத்திருப்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த நான்கு தசாப்தங்களாக ஐஜேஎம் வளர்ச்சிக்கு பங்களித்து, நாட்டின் முன்னணி கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றாக உருவாக்கிய பயணத்தில் பங்கேற்றது மிகப்பெரிய பெருமை என்றும் கிரிஷ்ணன் டான் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நேர்மை, தொழில்முனைவு, சிறப்பான செயல்திறன் மற்றும் தொலைநோக்கு நிர்வாகம் ஆகிய அடிப்படை மதிப்புகள் ஐஜேஎம் மிக முக்கியமான பாரம்பரியமாக தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வலுவான தலைமைத்துவம், தெளிவான வணிகத் திட்டம் மற்றும் பங்குதாரர்களின் தொடர்ந்த ஆதரவுடன், நிறுவனத்தின் சிறந்த காலங்கள் இன்னும் வரவிருப்பதாகவும் கிரிஷ்ணன் டான் தனது அறிக்கையில் நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.








