மலேசியாவின் 30 நாள் விசா இல்லா வசதியை வேலை தேடுவதற்காக பயன்படுத்த வேண்டாம் என, கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி வேலை வாய்ப்புகளை நம்பி, மலேசியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 நாள் விசா இல்லா வசதி, சுற்றுலா மற்றும் சமூக வருகைக்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும், வேலை தேடுவதற்காக அதைப் பயன்படுத்துவது குடிநுழைவு விதிமீறல் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.
மோசடி முகவர்களின் போலி வேலை உத்தரவாதங்களை நம்பி வருபவர்கள், விசா காலம் முடிந்தும் தங்குதல், சட்டவிரோத குடிநுழைவு நிலை, சுரண்டல், தடுப்புக்காவல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் வேலை செய்ய விரும்பும் இந்தியர்கள், செல்லுபடியாகும் வேலை அனுமதி அல்லது தொடர்புடைய விசாவைப் பெற்ற பின்னரே நாட்டுக்கு வர வேண்டும் எனவும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.








