கோலாலம்பூர், அக்டோபர்.07-
அதிகாரத் துஷ்பிரயோகம், லஞ்ச ஊழல், சட்டவிரோதப் பணம் மாற்றம் தொடர்பிலான 7 குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான் ஶ்ரீ முஹிடின் யாசின் செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவைச் சட்டத்துறை அலுவலகம் நிராகரித்துள்ளது.
நாட்டின் எட்டாவது பிரதமராகத் தாம் பொறுப்பெற்று இருந்த போது நாட்டின் நிதி வளத்தில் முறைகேடு புரிந்ததாக முஹிடினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைபெறுவதற்கு சட்டத்துறை அலுவலகம் உத்தரவிட்டுள்ளதாக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் வான் லாடின், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முஹிடின் யாசினிடமிருந்து பெறப்பட்ட அந்த பிரதிநிதித்துவ மனுவை, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகம் நிராகரித்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் முஹிடினுக்கு எதிரான 7 குற்றச்சாட்டுகள் மீதாக வழக்கு விசாரணையைத் தொடங்குவதற்கு பிராசிகியூஷன் தரப்பு தயாராக இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி கே. முனியாண்டியிடம் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் வான் ஷாஹாருடின் தெரிவித்தார்.








