May 24, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பட்டாணி தீ விபத்து: வீட்டில் கருகிய நிலையில் இந்திய ஆடவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

சுங்கை பட்டாணி தீ விபத்து: வீட்டில் கருகிய நிலையில் இந்திய ஆடவர் சடலமாக மீட்பு

Share:

சுங்கை பட்டாணி, மே.24-

சுங்கை பட்டாணி, தாமான் லெம்பா பூஜாங் குடியிருப்புப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 44 வயதுடைய இந்திய ஆடவர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சுங்கை பட்டாணி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு இந்த விபத்து குறித்த அவசர அழைப்பு கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு அதிகாரிகள், அங்கிருந்த ஓர் ஒற்றை மாடி வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டனர். உடனடியாகச் செயல்பட்ட அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்தக் கோரத் தீ விபத்தில் அந்த ஒற்றை மாடி வீடு சுமார் 80 விழுக்காடு முழுமையாகச் சேதமடைந்தது. தீவிரப் போராட்டத்திற்குப் பிறகு, பிற்பகல் 1.57 மணியளவில் தீ முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயணைப்பு அதிகாரிகள் வீட்டின் உள்பகுதியில் சோதனை நடத்திய போது, அங்குள்ள ஒரு படுக்கையறையில் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் கருகிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டது. மேலும், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளும் இந்தத் தீயில் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த தீ விபத்துக்கான முதன்மைக் காரணம் என்ன என்பது குறித்தும், இதனால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்தும் கெடா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Related News