சிரம்பான், நவம்பர்.26-
தங்களை டத்தோ என்று கூறிக் கொண்டு, பொதுமக்களை ஏமாற்றி வந்ததாக நம்பப்படும் இரண்டு போலி டத்தோக்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
34 மற்றும் 50 வயதுடைய அந்த இரண்டு நபர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை சிரம்பானில் உள்ள ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் தங்களின் பெயரின் முன்னால் டத்தோ விருதைச் சூட்டிக் கொண்டு, விருது பெறுவதற்கான அரச சடங்கிற்கான சில பொருட்களைக் காட்டி, மக்களை ஏமாற்றி வந்ததாகத் தெரிகிறது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.
தங்களின் மோசடி நடவடிக்கைகளுக்கு அவர்கள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு கைப்பேசிகள், இரண்டு ஏ.டி.எம். கார்டுகள், இரண்டு வாகனங்கள், அரண்மனை அட்டைகள், அதிகாரப்பூர்வ அரண்மனை முத்திரைகள், போலிச் சான்றிதழ்கள், விருதுக்குரிய சின்னங்கள், விருதுதளிப்பு சடங்கிற்கு பயன்படுத்தும் ஆடைகள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக ஏசிபி அஸாஹார் குறிப்பிட்டார்.








