ஷா ஆலாம், பிப்ரவரி.02-
சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 58 கோவில்கள் முறைப்படுத்தும் செயல்முறையை நிறைவு செய்து, இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் முறையாக அமைக்கப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினரான வீ. பாப்பாராய்டு தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மதங்களுக்கான சிறப்புக் குழுவின் லீமாஸின் (LIMAS) இணைத் தலைவரான பாப்பாராய்டு கூறுகையில், வழிபாட்டுத் தலங்களின் இடமாற்றச் சிக்கலைத் தீர்க்க பல்வேறு அணுகுமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத கட்டுமானங்களை இடிக்கும் நடவடிக்கைகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.
தைப்பூச விழா முதல் நாளான கடந்த சனிக்கிழமை பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அளவிலான தைப்பூசக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றியபோது பாப்பாராய்டு இதனைத் தெரிவித்தார்.
கிள்ளானில் உள்ள ஒரு கோவில் உட்பட, 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சில கோவில்கள் அவற்றின் அந்தஸ்து உறுதி செய்யப்பட்ட பிறகு அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
பாப்பாராய்டுவின் கூற்றுப்படி, மற்றவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட அல்லது சட்ட விதிகளை மீறிய சில கோவில்கள் இடிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில், தகுதியுள்ள கோவில்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு முறையான இடங்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என்றார்.
LIMAS குழுவில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. ஒரு கட்டுமானம் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால், அதைச் சரி செய்கிறோம். அவ்வாறு செய்ய இயலாத பட்சத்தில், குறிப்பாக மற்றவர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தால், இடிப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருப்பினும், அந்தத் தளம் பொருத்தமானதாக இருந்து, ஒப்புதல் பெற்றால் அனுமதி வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. மந்திரி பெசார் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் எதுவும் நிராகரிக்கப்படுவதில்லை; ஆனால் அவை ஊராட்சி மன்றம், மாவட்ட அலுவலகம், பொதுப்பணித்துறை மற்றும் நீர்ப்பாசன வடிகால் துறை ஆகியவற்றின் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“ஆனால், அரசாங்க ஏஜென்சிகளின் நிலத்தில் சட்டவிரோத வணிக நடவடிக்கைகளைப் பாதுகாப்பதற்காகக் கோவில்களைக் கட்டுவது போன்ற சட்டமீறல்களை ஏற்க முடியாது. இது சட்டத்திற்கும் மதக் கோட்பாடுகளுக்கும் எதிரானது," என்றார் அவர்.
தொடர்ந்து பேசிய அவர், கோவில் இடமாற்றம் தொடர்பான அனைத்து விவகாரங்களும் முறையான மற்றும் வெளிப்படையான முறையில் முடிவெடுக்கப்படுவதை உறுதி செய்ய, LIMAS குழுக் கூட்டத்தில் மட்டுமே விவாதிக்கப்படும் என்று வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் தீர்வுகளைச் சரியாகப் பரிசீலிக்க வேண்டுமே தவிர, உதவி வழங்கப்படவில்லை எனத் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது என்றும் பாப்பாராய்டு அவர் கேட்டுக் கொண்டார்.








