குவாந்தான், டிசம்பர்.21-
பகாங், பெந்தோங்கைச் சேர்ந்த 61 வயது முதியவர் ஒருவர், முகநூலில் வந்த பகுதிநேர வேலை விளம்பரத்தை நம்பி தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் 500 ஆயிரம் ரிங்கிட்டை பறி கொடுத்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது! பிரபல மின்-வணிகத் தளம் போல போலியாக உருவாக்கப்பட்ட இணைப்பில் இணைந்து, ஐரோப்பிய சந்தைக்குப் பொருட்களை விற்பதாகக் கருதி, ஆரம்பத்தில் கிடைத்த சிறு லாபத்தை நம்பி அவர் தொடர்ந்து பணத்தைக் கட்டி ஏமாந்துள்ளார்.
தனது சொந்தச் சேமிப்பையும் ஊழியர் சேமநிதி பணத்தையும் இழந்த அந்த முதியவர், இறுதியில் இலாபத் தொகையை எடுக்க முடியாமல் போனபோதுதான் தான் ஒரு பெரும் மோசடி வலையில் சிக்கியதை உணர்ந்துள்ளார். அதிக இலாபம் தரும் வேலைகளுக்கு ஆசைப்பட வேண்டாம் என எச்சரித்துள்ள பகாங் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ யஹயா ஒத்மான், பணப் பரிமாற்றம் செய்வதற்கு முன் 'Semak Mule' தளத்தில் சோதிக்குமாறும், ஏமாற்றப்பட்டால் உடனடியாக 997 என்ற எண்ணை அழைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்!








