கோலாலம்பூர், நவம்பர்.12-
போதைப் பொருள் கடத்தலுக்கு மலேசியர்களைப் பயன்படுத்துவதற்கு அனைத்துலக போதைப் பொருள் கும்பல்கள் தீவிரம் காட்டி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
சுமைக் கூலிகளைப் போன்று வெளிநாடுகளுக்கு போதைப் பொருளைக் கடத்திச் செல்வதற்கு இளைஞர்கள், வேலை தேடி வருகின்றவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் நிரந்தர வருமானம் இல்லாத தனி நபர்கள் ஆகியோரை இந்த அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இலக்காகக் கொண்டு பயன்படுத்தி வருகின்றன என்று டத்தோ ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக போதைப் பொருள் கடத்தலினால் வெளிநாடுகளில் பிடிபடும் மலேசியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் மொத்தம் 55 மலேசியர்கள் பிடிபட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பிடிபட்ட இந்த 55 பேரில் 50 பேர் ஆண்கள் என்றும், இதர 5 பேர் பெண்கள் என்றும் அவர் விளக்கினார்.
பெர்ஜியம், கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, லாவோஸ், மாக்காவ், சிங்கப்பூர், தைவான் மற்றும் தாய்லாந்து முதலிய நாடுகளின் சிறைகளில் இந்த 55 மலேசியர்கள் உள்ளனர் என்று டத்தோ ஹுசேன் ஓமார் தெரிவித்தார்.








